Thursday, June 9, 2016

17 - திருக்கண்ணபுரம்


                                       


சவுரிராஜப் பெருமாள் கோயில்

மூலவர் - நீலமேகப் பெருமாள்
உற்சவர்- சௌரிராஜப் பெருமாள்
தாயார்- கண்ணபுர நாயகி
தீர்த்தம் - நித்திய புஷ்கரணி

பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

நன்னிலம்- காரைக்கால் பாதையில் அமைந்துள்ளது திருக்கண்ணபுரம்

இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக்கரத்துடன் இல்லாது தானம் பெறும் கரத்துடன் உள்ளார்.பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக் கொள்கிறார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்ச விழாவில், அதிகாலையில் சிவனாகவும், மாலையில் பிரம்மனாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சி தரும் மும்மூர்த்திகள் தரிசனம் இங்கு சிறப்பு.

வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவம் இங்கு சிறப்பு.மாசி மாதம் பௌர்னமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜ பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளைமண்டபம் பகுதியில் அலங்காரம் செய்யப் படுகிறது.மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாக தொங்க விடப்படுகின்றன.பவளக்கால் சப்பரத்தில் தங்க கருட வாகனத்தின் மீது  பெருமாள் அமந்திருப்பார்.பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரைராஜப் பெருமாளை மாப்பிள்ளைப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.

ஒருநாள் இக்கோயில் அர்ச்சகர் கோயிலுக்கு வந்த அரசனுக்கு, சுவாமி மீது சூடிய மாலையைத் தர, அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது.இதனால் அரசன் கோபமடைய, அர்ச்சகர் அது பெருமாளின் முடி என்றார்.அரசனோ, அடுத்த நாள் தான் வந்து பார்க்கையில் பெருமாள் முடியில்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்கு உள்ளாவார் என் கிறான்.அர்ச்சகர், பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்ட, அவரிடம் இரக்கம் கொண்ட பெருமாள். அவரைக் காப்பாற்ற எண்ணினார்.அரசர் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலைமுடி இருந்தது.இந்நிகழ்ச்சியின் காரணமாக உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.உற்சவர் உலா வரும் அமாவாசை அன்று திருமுடி தரிசனம் காணலாம்.

இக்கோயிலில்சிறப்புப் பிரசாதம் பொங்கல் ஆகும்.அதற்கும் ஒரு வரலாறு உண்டு.திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்த முனையதரையர் எனும் பக்தர் திருப்பணிகளை செய்து வந்த போது பஞ்சம் ஏற்பட்டதாம்.அவரோ, பெருமாளுக்கு படைக்காமல் ஏதும் உண்ணமாட்டார்.எனவே, வீட்டில் உள்ள பொங்கலை அவரது மனைவி இறைவனுக்கு மானசீகமாக படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும், முனையதரையர் வீட்டில் பொங்கல் சிதறிக் கிடப்பதையும் கண்டு அடியார் வீட்டு பொங்கலை இறைவன் ஏற்றுக் கொண்டார் என அறிந்தனர்.

அரிசி ஐந்து பங்கு, பாசிப்ப்யிறு முழுப்பயிரு ஐந்து பங்கு. இரண்டு பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் மற்றும் உப்பு கலந்து த்யாரிக்கப் படுகிறது பொங்கல். மிளகு, சீரகம் கிடையாது.

வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த காளமேகப் புலவர் சைவராக மாறியதும்...பெருமாளுக்குக் கோபம் ஏற்பட்டதாம்.ஒருநாள் கண்ணபுரம் கோயிலில் மழைக்காக காளமேகம் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லையாம்.உடனே காளமேகம் ஒரு பாடல் பாட கதவுகள் திறந்ததாம்.அப்பாடல்...

கன்னபுர மாலே கடவுளிலு நீதியகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள்- முன்னமே
உன்பிறப்போ பத்தாம்முயர் சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப் பெண்ணைத் தொலையாதே

திருக்கண்ணபுரம் கோயிலில் குடியிருக்கும் பெருமாளே! நான் சொல்வது ஒன்று கேள். எல்லாக் கடவுளிலும் நீதான் பெரியவன்.உன்னைக் காட்டிலும் நான் பெரியவன்.

உனக்கு பத்தே பத்து பிறப்புதான்.சிவனுக்கோ ஒன்று கூட இல்லை.எனக்கோ எண்ணமுடியாத பிறப்பு.அதனால் நான் பெரியவன்.(எதுகை நோக்கிக் கண்ணபுரம் கன்னபுரம் ஆனது பாடலில்)

No comments:

Post a Comment