Saturday, June 4, 2016

11 - சிறுபுலியூர்

                                     

நாகப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது சிறுபுலியூர்.

கருடனும், அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள்.பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கரியம் செய்யும் நித்யசூரிகள் ஆயினும் பகைவர்கள்.சிறுபுலியூர் திவ்விய தலத்தின் தலவரலாறு கருட-நாக பகையை அடிப்படையாகக் கொண்டது.

பகவான் ஸ்ரீநாராயணனை சயனத்தில் தான் தாங்குவதாக ஆதிசேஷனும், அவரை எல்லா இடங்களுக்கும் தாமே சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம்  ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்து பகையாக மாறியது.

ஆதிசேஷன் இப்பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார்.அத்தவத்திற்கு இரங்கி பெருமான் ஆதிசேஷன் மடியில் சயனம் கொண்டு சிறுகுழந்தையாக பால சயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.அதாவது பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டிருக்கும் கோலம்.கருடனுக்கும் அபயமளித்த தலம்.இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேஷனும், பூமிக்குக் கீழே கருடன் சந்நிதியும் அமைந்துள்ளது.

(கருடா சௌக்கியமா? என்றதற்கு, அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட தலமாகக் கொள்ளலாம்)

சலசயனம், பாலவியாக்ரபுரம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்ற பெயர் ஏன்?
வியாக்ரபாரதர்  என்ற முனிவர்...சிதம்பரத்தில் தவம் செய்து தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டினார்.மோட்சம் கிடைக்க வல்லுநர் பெருமாளே என நடராஜர் கூற..அவ்வாறாயின் அதற்குரியத் தலத்தை காண்பிக்குமாறு முனிவர் வேண்டினார்.நடராஜர், சிவலிங்க ரூபமாக வழி காட்ட..அவரை விரைந்து பின்பற்ற தான் பெற்ற தவ வலிமையால் முனிவர் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்றார் என்றும் , அதனால் சிறுபுலியூர் என அழைக்கப் படுவதாக சொல்வர்.

பெருமாளைக் கண்டு, அந்த பிரம்மாண்டமான தோற்றம் பார்த்து வியாக்ரபாரத முனிவர் பிரமிப்பு அடைந்தார்.அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால் காணமுடியும்? எப்படிக் கரங்களால் தீண்டி இன்புற முடியும்?

அவரது தர்ம சங்கடத்தைக் கண்ட பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம்  தன்னை சுருக்கி கொண்டார்.

புலியாருக்காக சிறுவடிவு எடுத்து பெருமாள் மாறியதாலும் சிறுபுலியூர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

இச்சிறு கோலத்திலும், தன் நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தாங்கியுள்ளார்.திருவடிக்கு அருகே ஸ்ரீதேவியுடன், சிறுவடிவில் புலிக்கால் முனிவரும், கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.

மூலவர்- சலசயனப் பெருமாள் . தெற்கே திருமுக மண்டலம்..புஜங்க சயனம்

உற்சவர் -கிருபா சமுத்தியப் பெருமாள்

தாயார் - திருமாமகள்  நாச்சியார்

உற்சவர் - தயாநாயகி

தீர்த்தம் - மானச புஷ்கரணி

108 திவ்வியத் தலங்களில் பெருமாள் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்தத் தலங்கள் இரண்டு.

முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவத்தில் அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்

இரண்டாவது தலமான இங்கு...பால சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார்.

பிரம்மாண்டமான பெருமாள், புலிக்கால் முனிவருக்காக தன்னை சுருக்கிகொண்டது திருமங்கையாழ்வாருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாம்.அவரை சமாதானப்படுத்த, பெருமாள் அசரீரியாக "நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக!? என்று அருளினார்.

திருவனந்தபுரத்தில், தலையை இடது ஓரத்துக்கும் வலது ஓரத்துக்குமாக அசைத்து திருமாளை தரிசிக்க வேண்டிய நிலையில், திருக்கண்ணமங்கலத்தில் தலையை கீழிருந்து மேலாக கழுத்தை வளைத்து தரிசிக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment