Wednesday, July 12, 2017

61- திருக்காட்கரை



காட்கரையப்பன் கோயில், வாமன மூர்த்தி கோயில்

மூலவர்- காட்கரையப்பன்
தாயார்- வாத்சல்யவல்லி

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது

கடவுள் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

கோயில் , வட்ட வடிவ கேரளா பாணியில் அமைந்துள்ளது.

இக்கோயில் பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது

அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு அழுத்தி அழித்த இடம் இத்தலமாகும்

ஓணம் பண்டிகையை கொண்டாடப்படும் முதன்மைக் கோயிலாகும்

Tuesday, July 11, 2017

60 - திருவண்பரிசாரம்



உற்சவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீனிவாசன்

திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்

நாகர்கோயிலில்  இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.இத்தலத்தில் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார்.இதிருவாகிய லட்சுமி தனது பதியாகிய திருமாலை இவ்விடத்தில் சார்ந்ததால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப் படுகிறது

இத்தலத்தில் மூலவர் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால்
இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும்.

குலசேகர ஆழ்வார் கிபி 8ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம் கோயில் மதில் ஆகிய திருப்பணிகள் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார்

நம்மாழ்வார் குழந்தையாக  தவழ்வது போன்ற அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது.


(திருவண்பரிசாரம் என்ற இத்திருத்தலம், மலைநாடு என்ற அந்நாளைய பூகோள அமைப்பில் கேரளத்துக் கோயிலாகத் திகழ்ந்தாலும், இப்போது  தமிழ்நாட்டு எல்லைக்குட்பட்ட நாகர்கோவிலிலிருந்து நான்கு கி.மீ. தொலைவிலுள்ளது. ஆகவே இப்போதைய மாநில எல்லை வரையறைக்குட்பட்டு  இக்கோயில் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகிறது!

வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் 
                                                            செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே

- என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் திருவண்பரிசாரம். (ஆனால், திருப்பதிசாரம் என்றே அங்குள்ள வர்களால் எளிதில் அடையாளம் காணப்படும் தலம் இது. திருவண்பரிசாரம் என்றால் பொதுவாக அங்கே யாருக்கும் புரிவதில்லை.) நம்மாழ்வார் பாடிய இந்த ஒரே பாசுரமும் அவரது ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆழ்வார்திருநகரி திருத்தலத்தில் ஒரு புளிய மரப் பொந்துக்குள் பத்மாசனத்தில், யோக முத்திரையுடன் திகழ்ந்த இந்த ஆழ்வார், ‘‘திருவண்பரிசாரத்திலிருந்து வரும் பக்தர்களோ அல்லது இங்கிருந்து அங்கே  செல்லும் பக்தர்களோ யாரும் அங்குள்ள திருவாழ் மார்பனிடம் என்னைப் பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்களே, ஏன்?’’ என்று ஏங்கிக் கேட்கிறார். ‘‘பேரழகு மிக்க திருச்சக்கரம், சங்கைத் தலையில் சுமந்தபடி, உன்னைக் காண ஏங்கி, அலைந்து, வருந்தி நான் நிற்கிறேன் என்பதை அந்தப் பெருமாளிடம் சொல்ல யாருமில்லையே, என் மனவருத்தம் அவன் அறிவானா?’’ என்றும் கேட்டு ஆதங்கப்படுகிறார். 

நம்மாழ்வார் இப்படி ஆதங்கப்பட காரணம் உண்டு. இவருடைய தாயார் உடையநங்கை பிறந்த இந்தத் திருவண்பரிசாரம். ஆழ்வார் திருநகரியைச்  சேர்ந்த காரி என்ற வைணவப் பெருமானை மணந்து கொண்டு புகுந்த வீடு சென்றவர் உடையநங்கை. தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு நாற்ப த்தொரு நாட்கள் விரதமிருந்து, ஆழ்வார் திருநகரி தலத்துப் பெருமாள் ஆதிநாதனை வேண்டிக்கொண்டார் அவர். அதன் பிறகு திருவண் பரிசார த்துக்கு வந்து 41 நாட்கள் திருவாழ்மார்பனை எண்ணி தவமிருந்தார். அதன் பயனாக அவதரித்தவர்தான் நம்மாழ்வார். பிறந்தது முதல் எந்த  இயக்கமும் இல்லாமல், பெற்றோருக்குப் பெருந் தவிப்பைத் தந்தவர் இவர். ஆனால், மழலை வயதில் மெல்ல நகர்ந்து, நகர்ந்து பக்கத்திலிருந்த ஒரு  புளியமரப் பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டார். இப்படி இவர் வாசம் செய்தது பதினாறு ஆண்டுகள்! மதுரகவியாழ்வார் இத்தலத்துக்கு  வந்து நம்மாழ்வார் என்ற இந்த மகானை அடையாளம் கண்டுகொண்டு, அவரது இறை மதிப்பை உணர்ந்து, குருவாக ஏற்றுக் கொண்டார். எந்தப்  பெருமாளையும் பாடாமல், குருநாதரைப் பற்றி மட்டுமே பாக்கள் இயற்றிய அரும்பெரும் சீடர், மதுரகவியாழ்வார்.  

பெருமாள் பெரிதும் வியந்தார். தன்னைப் போற்றி ஒரு பாடல் கூட இயற்றாத மதுரகவி தன் குருநாதரை மட்டுமே போற்றிப் பாடல்கள் ஆக்கியி ருக்கிறார் என்பதால்தான் அந்த வியப்பு! அதோடு, அத்தகைய நம்மாழ்வார் எத்துணை புலமை வளம் நிரம்பப்பெற்றிருப்பார் என்பதையும் கணித் தார். பல்வேறு திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு  கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று புராணம் சொல்லி அறியும்போது நம்மாழ்வாரின் பெருமையை என்னென்று வியப்பது! தன் நடக்க  இயலாத தன்மையை உணர்ந்து, இப்படி  எல்லா பெருமாள்களும் தன்னை வந்துப் பார்த்து, பாசுரம் எழுதிக்கொண்டு போன அருளைக் கண்டு  நெகிழ்ந்து உருகினார் நம்மாழ்வார். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன்  மீது இவருக்கு ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீ ர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.  

பிரதான வளைவைக் கடந்து கோயிலுக்குள் செல்வோம். நேரே தோன்றும் கருவறை விமானத்தை பிராகாரச் சுற்றாக தரிசிக்கலாம். இடப்புறம்  மூலவர், பின்புறம் சாந்த யோக நரசிம்மர், வலப்புறம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அந்த விமானத்தில் காட்சி தருகிறார்கள். திருவாழ்மார்பன் பெருமாள் கருவறைக்கு வலது பக்கம் ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் தனிச் சந்நதியில் கொலு விருக்கிறார்கள். இவர்களுடன்  விபீஷ்ணர், அனுமன், குலசேகர ஆழ்வார், அகத்தியரையும் சேர்த்து தரிசிக்கலாம். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார். கருவறைச் சுற்றில் கன்னிமூல விநாயகர் தரிசனமளிக்கிறார். அருகிலுள்ள சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 முதல் பகல் 1  மணிவரைதான் திறந்திருக்கும் என்கிறார்கள்; மாலையில் திறப்பதில்லையாம். இங்கு பகல் பத்து கிடையாது என்றும், ராப்பத்து மட்டும்தான்  அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளில் கருட சேவை விசேஷம்.

இங்கே ஒரு நடராஜர் விக்ரகத்தைப் பார்த்த போது வியப்பாக இருந்தது. மைனர் ஜடயாபுரம் என்ற தலத்தில் உள்ள கோயிலிலிருந்த இச்சிலை  இங்கே பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவதாகச் சொன்னார்கள். கருவறையில் திருவாழ்மார்பன், நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரதாரியாக, அமர்ந்த கோலத்தில், நெடிதுயர்ந்த தோற்றமாகக் காட்சியளிக்கிறார்.  அவரைச் சுற்றிலும் சப்த ரிஷிகள். இங்கே ரிஷிகள் எப்படி வந்தார்கள்? இந்த ஏழு ரிஷிகளும் திருமாலை தரிசிக்க வேண்டி தவமிருந்தார்கள். மலய பர்வதத்தின் தெற்குப் பகுதியில், ஞானாரண்யம் என்ற வனத்தில்,  பிரக்ஞா நதிக்கரையில் அத்ரி முனிவரின் தவச்சாலை ஒன்று இருந்தது. அங்கேதான் இவர்கள் தவம் மேற்கொண்டிருந்தார்கள். அப்போது ஓர்  அசரீரி கேட்டது:  ‘‘இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால், விஷ்ணு பாதம் என்று சொல்லப்படும் சோமதீர்த்தம் ஒன்று உள்ளது. அந்தக்  கரையில், அரசமரத்தடியில் ஓர் உயரிய தலம் அமைந்திருக்கிறது. அங்கு சென்று தவமியற்றினீர்களானால் உங்கள் எண்ணம் ஈடேறும்.’’ உடனே முனிவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்றார்கள்; தவமிருந்தார்கள்; அசரீரி பலிக்கக் கண்டார்கள். ஆமாம், அங்கே அவர்கள் எதிர்பார்த்த  மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அவர்களுக்கு தரிசனம் வழங்கினார். 

இந்தப் பெருமாள் திருவாழ்மார்பன் என்று  அழைக்கப்படுவதையும் அறிந்து கொண்ட அவர்கள், தங்களுக்குக் காட்சி கொடுத்ததைப் போலவே அனைத்து பக்தர்களுக்கும் இதே திருவாழ்மார்பனாக அவர் காட்சியளித்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சாட்சியாக இப்போதும் அவர்கள் அவருடைய கருவறையில் அவரைச் சூழ்ந்தி ருக்கிறார்கள். ஹிரண்ய சம்ஹாரத்துக்குப் பிறகு நரசிம்ம மூர்த்தியின் அடங்காத கோபம் அவரைப் பல இடங்களுக்கும் அலைக்கழிக்க, அப்படி இந்தத் தலத்துக்கு  வந்த அவரை மஹாலட்சுமி எதிர்கொண்டாள். உடனேயே சாந்தமானார் நரசிம்மர். அதுமட்டுமல்ல, இதே தலத்தில் அந்தத் திருமகளைத் தன்  மார்பகத்தில் ஏந்திக்கொண்டார்.  அதனாலேயே திருவாழ்மார்பன் என்ற பெயரும் கொண்டார். இப்படி பெருமாளோடு ஒன்றி விட்டதால்,  இக்கோயிலில் தாயாருக்கென்று தனிச் சந்நதி இல்லை. இந்தக் கருவறைக்கு வலது பக்கத்தில், ராமன் சந்நதி கொண்டிருப்பதற்கு விபீஷணன்தான் காரணம். 

அரங்கனை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக விபீஷணன் முயன்றபோது ஸ்ரீரங்கத்திலேயே அவர் நிரந்தரமாகப் பள்ளி கொண்டுவிட, ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் அவன் இத்தலம்  வழியாக வந்தான். அப்போது அவனுக்குக் காட்சி கொடுத்தார் திருவாழ்மார்பன். ‘உன் முக-அக வாட்டத்தைப் போக்க நான் உதவலாமா?’ என்று  பரிவுடன் வினவினார். தன் குறையை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று காத்திருந்த விபீஷணன், ‘என்னால் ராமபிரானை மறக்க முடியவில்லை. இங்கே அவரை மீண்டும்  தரிசிக்க விரும்புகிறேன். தங்களால் உதவ முடியுமா?’ என்று யாசித்தான். உடனே அங்கே வில்-அம்புடன் ராமர் தோன்றினார். உடன் சீதை, லட்சுமணன், அனுமன்! என்ன திவ்யத் திருக்காட்சி இது என்று புளங்காகிதம்  அடைந்தான் விபீஷணன். அவனுக்கு இவ்வாறு காட்சியளித்த ராமன்தான் இப்போது நம்மையும் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார்.

இங்கே அகத்தியரும் நமக்கு தரிசனம் தருவதற்கு நாம் ஆஞ்சநேயருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆமாம், அனுமனுடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க, அகத்தியர் இங்கே ராமாயண மகாகாவியத்தை அருளினார்! குலசேகர ராஜன் என்ற குலசேகர ஆழ்வார், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோயிலைப் புனரமைத்திருக்கிறார். மதில் சுவர்கள் எழுப்பி,  வாகனங்களை உருவாக்கி, கொடிக்கம்பம் நிர்மாணித்து, கும்பாபிஷேகமும் செய்வித்து மகிழ்ந்திருக்கிறார். இந்த நன்றியை மறவாமல், அவருக்கும் ஒரு  சிலை உருவாக்கி அகத்தியருக்குப் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 
கோயிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம். அதற்கு இடப்புறம் ஒரு அரசமரம், அதனடியில் கட்டப்பட்ட மேடையில் விநாயகர் மற்றும்  நாகர்கள் அமைந்திருக்கிறார்கள். சோமதீர்த்தக் கட்டத்திற்குள் சூரியநாராயணன் தனியே சிறு சந்நதியில் நின்றிருக்கிறார். 

பக்கத்தில் சுதைச் சிற்பமாக  அக்னிமாடன். கோயில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடையநங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம். நம்மாழ்வாரின் தாயாரின் இந்த ‘வீடு’,  இப்போது ஒரு பஜனை மடமாகத் தன் பணியை ஆற்றி வருகிறது. ‘நம்மாழ்வார் தாயகம்’ என்றழைக்கப்படும் இத்தலத்தில் உடையநங்கை  மூலவராகவும், உற்சவராகவும் வழிபடப்படுகிறார். நாலாயிர திவ்ய பிரபந்தங் களையே மீட்டுக் கொடுத்தப் பேரருளாளன் நம்மாழ்வாரின் தாய் இவர்  என்று நினைக்கும்போது எத்தகைய பேறு பெற்றிருக்கிறார் இவர் என்ற நெகிழ்ச்சி கண்களில் நீர் சுரக்கச் செய்கிறது.)

(நன்றி -தினகரன்)



Tuesday, June 27, 2017

58- திருக்கோளூர்



இத்தலம் நவ திருப்பதியில் மூன்றாவதாகும்

பெருமாள்- வைத்தமாநிதி பெருமாள்

தாயார்- குமுதவல்லி. கோளூர்வள்ளி

தீர்த்தம்- குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்தத்தலமாகும்

பார்வதியின் சாபத்தால் குபேரனிடம் இருந்த நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலகி, திருமாலிடம் சரணடைந்தன.ஆகவே, இத்தலப் பெருமாள் வைத்தமாநிதி எனப்படுகிறார்.பின்னர், குபேரன், திருமாலை வழிபட்டு இழந்த செல்வங்களைப் பெற்றார்

ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.இறைவன் கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில்

மணவாள மாமுனியும்,நம்மாழ்வாரும் (12பாடல்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர்

மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலமாகும்

இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில்.இத்தலத்திலும், ஆதனூரிலும் ஆண்டளக்கும் ஐயன் கோயிலிலும் காணப்படுகிறார்

(திருக்கோளூரில் வாழ்வது புண்ணியமாகும்.ஸ்ரீராமானுஜர் இத்தலத்திற்கு வந்த போது, மோர் விற்கும் பெண் இவ்வூரிலிருந்து வெளியேறுகிறாள்.ராமானுஜர் அதற்கான காரணம் கேட்கையில் அவர் வைணவப் பெரியோர்கள் வைணவத்திற்காக ஆற்றிய 81 தொண்டுகளைக் கூறி , அது போல நான் இல்லையே! என வருந்துகிறாள்.மோர் விற்கும் பெண்ணிற்கு இருக்கும் திறமையைக் கண்டு மகிழ்ந்தவர், அவளது இல்லத்திற்குச் சென்று உணவருந்துகிறார்.இதுவே திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என வழங்கப்படுகிறது) 

Friday, June 23, 2017

57- திருக்குறுங்குடி



அழகிய நம்பிராயர் கோயில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது  இத்தலம்

மூலவர்- அழகிய நம்பிராயர் (வைஷ்ணவ நம்பி)

தாயார்- குறுங்குடிவல்லி நாச்சியார்

தீர்த்தம் - திருப்பாற்கடல், பஞ்சதுறை

இத்தலத்தைப் பற்றி, திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார்,பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்

மூலவர் நம்பிராயரின் வலப்புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னிதி அமைந்திருப்பது சிறப்பாகும்

நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இங்குக் காட்சித் தருகிறார்

வராக அவதாரம் கொண்டு திருமால் தன் நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்றாயிற்று

நம்பியாற்றின் கரையில் அமர்ந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல்

Thursday, June 22, 2017

56 - திருக்குளந்தை




பெருங்குளம் பெருமாள் கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர்- சோர நாதன் (மாயக்கூத்தன்)

தாயார்- குளந்தை வல்லித்தாயார் (கமலா தேவி)
                  அலமேலு மங்கைத் தாயார்

தீர்த்தம் - பெருங்குளம்

நம்மாழ்வார் ஒரே ஒரு பாடல் மூலம் மங்களாசாசனம் செய்தத் தலம்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 7 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோரநாதன் (மாயக்கூத்தன்),ஸ்ரீனிவாசன் என்ற பெயர்களில் பெருமாள் அழைக்கப்படுகிறார்

Wednesday, June 21, 2017

55- திருவரகுணமங்கை (நத்தம்)



தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்லது இத்தலம்

மூலவர்- விஜயாசனப் பெருமாள்

தாயார்- வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார்

அகநாச தீர்த்தம்,அக்னி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

இத்தலை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே ஒரு ,மைல் தொலைவில் உள்ளது.இறைவர், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள்

இதன் விமானம் விஜயகோடி விமானம் என்னும் வகையைச் சேர்ந்தது

54- வைகுண்டநாதர் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)



திருவைகுண்டம்...கள்ளபிரான் திருக்கோயில்

மூலவர்- வைகுந்த நாதன் (நின்ற திருக்கோலம்)

உற்சவர்- கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர்

தாயார்- வைகுண்டவல்லி, பூதேவி

உற்சவ தாயார்- ஸ்ரீ சோரநாயகி

தீர்த்தம்- பிருகு, தாமிரபரணி நதி

பிரத்யட்சம்- பிருகு சக்கரவர்த்தி , இந்திரன்

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்

துத்துக்குடி மாவட்டத்தில்...திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது

நவ திருப்பதிகளில் ஒன்று.  நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்

9 நிலைகளும்,110 அடி உயரமும் கொண்டுள்ளது ராஜகோபுரம்.

மூலவர் வைகுண்டநாதர், சந்திர விமானத்தின் கீழ், ஆதிஷேசன் குடை பிடிக்க, நான் கு கரங்களுடன், மார்பில் மாகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிரார்

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூ தேவி, ஸ்ரீதேவியுடன் காட்சித் தருகிறார்.

இரண்டு தாயார்களுக்கும் டஹ்னித்தனி சன்னிதிகளும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளது.

தலவிருட்சம்-பவளமல்லி

பிரம்மதேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார்.தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் டஹ்வம் புரிய நாராயணனும் வேடஹ்ங்களை மீட்டு அவருக்கு உதவும் பொருட்டு அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என் கிரது இக்கோயிலின் தல புராணம்

உறசவர், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தி...

ஸ்ரீவைகுண்டம்நகரில் திருட்டுத் தொழில் செய்து வந்த  காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாதரை வழிப்பட்டு பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான்.கிடைத்தப் பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி விட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்ற போது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக் கொள்ள இவன் மட்டும் தப்பி விட்டான்.அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான்.காலதூஷகன் வைகுண்டநாதரை வேண்ட, பெருமாளே காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார்.அரசனிடம், அவன் தன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறிவிட்டதை உணர்த்தி, பின் அரசனுக்கும், காலதூஷனுக்கும்  காட்சி தந்து அருளினார்.திருடனாக வந்தமையால்பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப் படுகிறார்

நவதிருப்பதியில் முதன்மையானத் தலம்.நம்மாழ்வார், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார்.

இங்குள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன.சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6ஆம் நாளன்று சூரியஒளி வைகுண்டநாதர் மீது விழுகிறது.அடஹ்ற்கு ஏற்றாற் போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப் பட்டது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும்..இவ்விழா, தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.விழாவில் னவ திருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவதைப் பார்க்கலாம்.நம்மாழ்வாரின் உருவச் சிலை அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவத்திருப்பதிக்கும் எடுத்துச் செல்லபப்ட்டு அந்தந்த தலங்களில், அந்தந்தத் தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் 

Friday, June 16, 2017

53 - திருப்பேரை



திருப்பேரை அல்லது தென் திருப்பேரை

மகர நெடுங்குழைக்காதன்  திருக்கோயில் (வீற்றிருந்த கோலம்)

உற்சவர்- நிகரில் முகில் வண்ணன்

தாயார்- குழைக்காத நாச்சியார்

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம், திருநகிரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென் கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஸ்ரீபேரை (லட்சுமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்ற பெயரைப் பெற்றது இந்தத் தலம்

108 வைணவத் தலங்களில் திருச்சிக்கு அருகில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் இருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.

இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் , மகர தீர்த்தம் ஆகியவை தீர்த்தங்கள்

நம்மாழ்வார் 11 பாசுரங்களும், மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர் 

Friday, June 2, 2017

52- திருப்புளிங்குடி (நவ திருப்பதி)



தூத்துக்குடி மாவட்டத்தில், வரகுணமங்கையிலிருந்து கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது இத் தலம்.

மூலவர் - பூமிபாலகர்
உற்சவர் - காய்சின வேந்தர் (காசினி வேந்தர்)

தாயார் - மலர்மகள் நாச்சியார்,பூமிப்பிராட்டி

தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்.12 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தலபுராணத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது.இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலகர் என்ற பெயர்களில் பள்ளிகொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார்.

இறைவியின் பெயர் மலர் மகள் நாச்சியார்

நவக்கிரககளில் வியாழனோடு சம்பந்தப்பட்டத் தலமாகும்

இத்தலத்தில் உள்ள லட்சுமி தேவி, பூமிபிராட்டி ஆகியோரின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவைகள்.தவிர்த்து, வேறு கோயில்களில் காணமுடியாக் காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது

சயனக் கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் செவிப்பதற்கு ஏற்றாற்போல அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப்பெறாததாகும்

Wednesday, May 31, 2017

51- வானமாமலை



புராண பெயர்கள்

நாங்குநேரி
தோத்தாத்ரி
ஸ்ரீவரமங்கை(சீரிவரமங்கலநகர்)
நாகணை சேரி

இறைவன் - தோத்தாத்ரிநாதன்
இறைவி- ஸ்ரீதேவி,பூமி தேவி
தீர்த்தம்- சேற்றுத்தாமரை தீர்த்தம்

பிரத்யட்சம் உரோம (ரிஷி) முனிவர்

இது ஒரு சுயம்புத் தலமாகும்

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி,தோத்தாத்ரி,ஸ்ரீவரமங்கை நகர் என்று பல பெயர்கள் உண்டு

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம்,நரசிம்மபுராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது

உரோம ரிஷி தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமக்ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்ததால் ஸ்ரீவரமங்கல நகர் எனவும், ஆதிசேஷன் இங்கு தவமிருந்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலைஎனவும், இங்குள்ள குளத்தை நான் கு ஏரிகளாக வெட்டியதால்..நான் கு ..ஏரி...நாங்குநேரி எனவும், அந்த நாங்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப்பகுதியில் அமைந்ததால் நான் கூர் ஏர்  என்பது நாங்குநேரி ஆனது என்றெல்லாம் கூறப்படுகிறது

இங்கு இறைவனுக்கு தினமும் தைல அபிஷேகம் நடைபெறும்.அந்த எண்ணெய்யை எடுத்து இங்குள்ள நாழிக் கிணற்றில் ஊற்ரி வருகின்றனர்.இந்நாழிக் கிணற்றில் உள்ள எண்ணையை உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை

ஸ்ரீவானமாமலை மண்டபத்திற்கு இதுவே தலைமைப் பீடமாகும்.நம்மாழ்வார் மட்டும் இத்தலம் பற்றி 11 பாக்கள் பாடி மங்களாசசனம் செய்துள்ளார்.

இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது 

Tuesday, May 30, 2017

50-திருத்துலைவில்லி மங்கலம் (நவ திருப்பதி)



புராணப் பெயர் திருத்துலைவில்லி மங்கலம்

தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில்..ராகு அம்சம்)

மூலவர்- ஸ்ரீஅரவிந்த  லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)

தாயார்- கருந்தடக்கண்ணி நாச்சியார்

தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம் (அசுவனி தேவர்கள் நீராடிய தீர்த்தம்

பிரத்யட்சம்- அஸ்வினி ,தேவர்கள்,சுப்ரபர்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்

இது இரட்டைத் திருப்பதி எனவும் வழங்கப்படும் தலமாகும்

திருத்துலைவில்லி
மங்கலம்
(திருத்தொலைவில்லி மங்களம்)
இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து, ஒரு திவ்வியத் திருத்தலமாகக் கருதப் படுகிறது.ஆயினும், நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலமாகிறது

இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுதபோது ஒளிரும் வில்லையும், தராசையும் கண்டு வியப்புற்று கையில் எடுக்க , அவை சாபவிமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உரு பெற்றன.
குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர்.இதனாலேயே இவ்வூர்,துலை,வில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட பெருமாள் காட்சித் தந்தார்.தேவப்பிரான் என்ற பெயரும் பெற்றார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் தெற்குத் திருக் கோயில்.ராகு அம்சம் திருக்கோயில்..

திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
-----------------------------------------------------------------------------------------

தினந்தாறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர்.இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை எங்கிருந்து கொண்டு வருகிரார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்க வரும் போது, பின் தொடர்ந்து வரும்போது, சுப்ரரர் காரணத்தைக் கேட்டார்.செந்தாமரை மலர்கள் கொண்டு வந்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும், அங்கேயே தமக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் பெருமாள் கூறினார்

இத்தலம் இரட்டத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்

Monday, May 29, 2017

49- ஆழ்வார் திருநகரி (நவ திருப்பதி)



ஆழ்வார் திருநகரி..ஆதிநாதன் கோயில்

இந்த ஊர்  திருக்குருகூர் எனவும் வழங்கப்படுகிறது

மூலவர் - ஆதி நாதன்

தாயார்- ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், திருச்ச்ங்கண்ணி துறை

பிரதியட்சம்- பிரம்மா, மதுரகவியாழ்வார்,நம்மாழ்வார்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

நம்மாழ்வார் அவதரித்தத்தலம்.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இத்தலம் பிரம்மாவிற்குக் குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால்குருகூர் எனப்படுகிறது .ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என்னும் திருப்பெயர் பெற்றார்.

நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிஷேசன்.தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில், எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தம்பியான இலக்குவனிடம் ராமபிரான் கூறியிருந்தார்

அப்போது வந்த துர்வாசரை அனுமதிக்க இலக்குவன் தயங்குகையில், அவர் அவனை புளிய மரமாகப் பிறப்பெடுக்குமாறு சபித்து விட்டார்

அதனால், இத்தலத்தில் இலக்குவன் புளியமரமாகி விட, அவனது வேண்டுகோலுக்கு இணங்கி ராமன் பின்னாளில் நம்மாழ்வாராக அவதரித்து, அப்புளியமரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால்..இத்தலம் ஷேச க்ஷேத்திரம் என விளங்குவதாகக் கூறுவார்கள்

Saturday, May 27, 2017

48- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்



இது பழமையானதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்தத் தலமாகும்

வேறு பெயர்கள் -  வன்புதுவை,ஸ்ரீதன்விபுரம்,திருவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்தலம்

இப்பகுதி மல்லி  என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது.வில்லி காட்டைத் திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமாக்கினான்.அதனால் வில்லிபுத்தூர் என்ற பெயர் உருவானது.ராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் கோயில்களுக்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளாள்

முன்னொருகாலத்தில் இப்பகுதி வராக சேத்திரம் என அழைக்கப்பட்டது,ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது.அதில் வில்லி,கண்டன் என இரு வேடுவ சகோதரர்கள் இருந்தனர்.அவர்கள் ஒருநாள் வேட்டையாடிவிட்டு வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்திச் செல்கிறான்.அவனை புலி கொன்று விடுகிறது.இதை அறியாத வில்லி தன் சகோதரனைத் தேடி அலைகிறான்.சோர்வடைந்தவன் ஒரு மரத்தின் நிழலில் உறங்கி விடுகிறான்.அப்போது, அவன் கனவில் பெருமாள் தோன்று, கண்டனுக்கு ஆன நிலையைக் கூறுகிறார்.பின்னர் அவர் தாம் அங்கு "காலநேமி" என்ற பெயரில் இருக்கும் அசுரனை வதம் செய்ய எழுந்தருளியுள்ளதாகவும், பின்னர் ஆல்மரத்தடியிலுள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கப் போவதாகவும் கூறி,இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வருமாறு கூறி மறைகிறார்.அதனால், இவ்வூருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது

ஸ்ரீவரபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும்.இக்கோவில் கோபுரம் 192 அடி உயரமானது.இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ சின்னம் ஆகும்.இக்கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது.ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான இவர், தனது மருமகனான பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டியதாகவும் கூறுவர்.அவர், பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, அதனால் தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார்

இக்கோவிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகக் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுகிறது.நல்லெண்ணெய்,பசும்பால்,நெல்லிக்காய்,தாழம்பூ,இளநீர் ஆகிய பல பொருட்களைச் சேர்த்து ஏழுபடி எண்ணெய் விட்டு இரண்டு பேர் 40 நாட்கள் காய்ச்சுவர்.இதில் 4 படி தைலம் கிடைக்கும்.மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இத்தைலமே சாற்றப்படுகின்றது.மார்கழி மாதம் முடிந்ததும் பக்தர்களுக்குப் பிரசாதமாக இத்தைலம் கொடுக்கப் படுகிறது.பக்தர்கள் நோய்த் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது


18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்  பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கலைநயமிக்க மர சிற்பங்களும்,ஒன்பது மரச் சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அல்ங்கார பதாகைகளும், அதன் உச்சியில் ஐந்து பகுதி இணைக்கப்பட்ட கும்ப கலசமும் பட்டு கொடியும்  , ஒன்பது பெரிய வடமும் அமையப் பெற்றது.பத்து கிலோமீட்டர் தேரை மக்கள் பிடித்து இழுப்பர்

காலப்போக்கில் மரச் சக்கரங்கள் சேதமுற்றதால், தேர் 18 ஆண்டுகள் ஓடாமல் இருந்தது.

தற்போது மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து இரும்பு அடிசட்டம், விசைத்தடையுடன் கூடிய நான் கு  இரும்பு சக்கரங்கள் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டுள்ளது 

Wednesday, May 24, 2017

47- கூடல் அழகர் கோவில்



தமிழகத்தில் மதுரையில் அமைந்துள்ள திருத்தலம் இது

இக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாளின் பெயர் "கூடலழகர்".மாடத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் கோலம், அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது


உற்சவர் வியூக சுந்தரராஜப் பெருமாள்.

அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை 'அந்தர வானத்து எம்பெருமான்" என் கிறார்

ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம்.எட்டுப் பிரகாரங்கள்.ஆண்டாள், சகக்ரத்தாழ்வா, நவக்கிரகாதியர்,ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள்,மணவாள மாமுனிகள்,விச்வக்சேனர்,ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணன்,கருடன்,ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.

மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம் தரையில் விழுவதில்லை

பெரியாழ்வார்  இக்கோயிலில் உள்ள எம்பெருமானின் அந்தர வானத்து கோலத்தைக் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

பொதுவாக சைவ சமயக் கோயில்களில் மட்டுமே நவக்கிரக சந்நிதி இருக்கும்.வைணவத் தளங்களில் அதற்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும்.வைணவத் தலமான இக்கோயிலில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம் ஹோ பூமிபுரஸ்ய யௌம்ய சோமசுந்தரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்கவஸ்யச
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம்- செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம்- புதன்
ஸ்ரீவாமனவதாரம்- குரு
ஸ்ரீ பரசுராமவதாரம்- சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம்- சனி
ஸ்ரீ மச்சவதாரம்- கேது
ஸ்ரீ வராகவதாரம்- ராகு
ஸ்ரீ பலராமவதாரம்- குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாகக் கூறப்பட்டுள்ளன

Monday, May 8, 2017

46 - திருமோகூர்

காளமேகப் பெருமாள் கோவில்

இக்கோவில் மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில்  ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது

இக்கோவிலின் மூலவர்
காளமேகப் பெருமாள்
தாயார் மோகனவல்லித் தாயார்
உற்சவர் திருமோகூர் ஆப்தன்
உற்சவத் தாயார் மோகனவல்லித் தாயார்
புஷ்கரணி சீராப்தி புஷ்கரணி..

இக்கோவிலிலுள்ள பல மணடபங்கள் சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர் திருப்பணீயாகும்

சந்நிதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும்

இக்கோவிலில், மண்டபத்தில் உள்ள இராமர், சீதை,மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லிலால் ஆன சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்கள் ஆகும்

இம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியபடியே மருது பாண்டிய ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது

நம்மாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்

45- திருத்தங்கல்









திருத்தங்கள் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்...108 வைணவத் திவ்விய தேசங்களில் பழைமையான ஒன்றாகும்

இதன் புராணப் பெயர்கள்

கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமால் திருக்கோவில்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இக்கோவில்

மூலவர் நின்ற நாராயணர்
உற்சவர்  திருத்தண்காலப்பன்

தாயார்-
செங்கமலத்தாயார்
அன்னநாயகி (ஸ்ரீதேவி)

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி,பூதேவி,நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ, தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார்.பெருமாள் ஸ்ரீதேவையை மணம் புரிந்தருளிய திருத்தலம்.மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்தத் தலம்.அழகிய சாந்த மணவாளர் திருக்கோவில் தலம்.

சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை இத்தலத்தில் நிகழ்ந்டஹ்தாகும்

இத்தலம் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது