Tuesday, July 11, 2017

60 - திருவண்பரிசாரம்



உற்சவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீனிவாசன்

திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்

நாகர்கோயிலில்  இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.இத்தலத்தில் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார்.இதிருவாகிய லட்சுமி தனது பதியாகிய திருமாலை இவ்விடத்தில் சார்ந்ததால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப் படுகிறது

இத்தலத்தில் மூலவர் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால்
இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும்.

குலசேகர ஆழ்வார் கிபி 8ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம் கோயில் மதில் ஆகிய திருப்பணிகள் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார்

நம்மாழ்வார் குழந்தையாக  தவழ்வது போன்ற அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது.


(திருவண்பரிசாரம் என்ற இத்திருத்தலம், மலைநாடு என்ற அந்நாளைய பூகோள அமைப்பில் கேரளத்துக் கோயிலாகத் திகழ்ந்தாலும், இப்போது  தமிழ்நாட்டு எல்லைக்குட்பட்ட நாகர்கோவிலிலிருந்து நான்கு கி.மீ. தொலைவிலுள்ளது. ஆகவே இப்போதைய மாநில எல்லை வரையறைக்குட்பட்டு  இக்கோயில் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகிறது!

வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் 
                                                            செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே

- என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் திருவண்பரிசாரம். (ஆனால், திருப்பதிசாரம் என்றே அங்குள்ள வர்களால் எளிதில் அடையாளம் காணப்படும் தலம் இது. திருவண்பரிசாரம் என்றால் பொதுவாக அங்கே யாருக்கும் புரிவதில்லை.) நம்மாழ்வார் பாடிய இந்த ஒரே பாசுரமும் அவரது ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆழ்வார்திருநகரி திருத்தலத்தில் ஒரு புளிய மரப் பொந்துக்குள் பத்மாசனத்தில், யோக முத்திரையுடன் திகழ்ந்த இந்த ஆழ்வார், ‘‘திருவண்பரிசாரத்திலிருந்து வரும் பக்தர்களோ அல்லது இங்கிருந்து அங்கே  செல்லும் பக்தர்களோ யாரும் அங்குள்ள திருவாழ் மார்பனிடம் என்னைப் பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்களே, ஏன்?’’ என்று ஏங்கிக் கேட்கிறார். ‘‘பேரழகு மிக்க திருச்சக்கரம், சங்கைத் தலையில் சுமந்தபடி, உன்னைக் காண ஏங்கி, அலைந்து, வருந்தி நான் நிற்கிறேன் என்பதை அந்தப் பெருமாளிடம் சொல்ல யாருமில்லையே, என் மனவருத்தம் அவன் அறிவானா?’’ என்றும் கேட்டு ஆதங்கப்படுகிறார். 

நம்மாழ்வார் இப்படி ஆதங்கப்பட காரணம் உண்டு. இவருடைய தாயார் உடையநங்கை பிறந்த இந்தத் திருவண்பரிசாரம். ஆழ்வார் திருநகரியைச்  சேர்ந்த காரி என்ற வைணவப் பெருமானை மணந்து கொண்டு புகுந்த வீடு சென்றவர் உடையநங்கை. தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு நாற்ப த்தொரு நாட்கள் விரதமிருந்து, ஆழ்வார் திருநகரி தலத்துப் பெருமாள் ஆதிநாதனை வேண்டிக்கொண்டார் அவர். அதன் பிறகு திருவண் பரிசார த்துக்கு வந்து 41 நாட்கள் திருவாழ்மார்பனை எண்ணி தவமிருந்தார். அதன் பயனாக அவதரித்தவர்தான் நம்மாழ்வார். பிறந்தது முதல் எந்த  இயக்கமும் இல்லாமல், பெற்றோருக்குப் பெருந் தவிப்பைத் தந்தவர் இவர். ஆனால், மழலை வயதில் மெல்ல நகர்ந்து, நகர்ந்து பக்கத்திலிருந்த ஒரு  புளியமரப் பொந்தினுள் சென்று அமர்ந்து கொண்டார். இப்படி இவர் வாசம் செய்தது பதினாறு ஆண்டுகள்! மதுரகவியாழ்வார் இத்தலத்துக்கு  வந்து நம்மாழ்வார் என்ற இந்த மகானை அடையாளம் கண்டுகொண்டு, அவரது இறை மதிப்பை உணர்ந்து, குருவாக ஏற்றுக் கொண்டார். எந்தப்  பெருமாளையும் பாடாமல், குருநாதரைப் பற்றி மட்டுமே பாக்கள் இயற்றிய அரும்பெரும் சீடர், மதுரகவியாழ்வார்.  

பெருமாள் பெரிதும் வியந்தார். தன்னைப் போற்றி ஒரு பாடல் கூட இயற்றாத மதுரகவி தன் குருநாதரை மட்டுமே போற்றிப் பாடல்கள் ஆக்கியி ருக்கிறார் என்பதால்தான் அந்த வியப்பு! அதோடு, அத்தகைய நம்மாழ்வார் எத்துணை புலமை வளம் நிரம்பப்பெற்றிருப்பார் என்பதையும் கணித் தார். பல்வேறு திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருந்த பெருமாள்கள் எல்லோரும் நம்மாழ்வாரிடம் வந்து தன்னைப் பற்றி பாடல் இயற்றுமாறு  கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று புராணம் சொல்லி அறியும்போது நம்மாழ்வாரின் பெருமையை என்னென்று வியப்பது! தன் நடக்க  இயலாத தன்மையை உணர்ந்து, இப்படி  எல்லா பெருமாள்களும் தன்னை வந்துப் பார்த்து, பாசுரம் எழுதிக்கொண்டு போன அருளைக் கண்டு  நெகிழ்ந்து உருகினார் நம்மாழ்வார். ஆனாலும், திருவண் பரிசாரம் என்ற தன் தாயாரின் பிறந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் திருவாழ்மார்பன்  மீது இவருக்கு ஏதோ வருத்தம் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் யாராவது அந்தப் பெருமாளிடம் என்னைப் பற்றிச் சொல்ல மாட்டீ ர்களா என்று ஏக்கமாகக் கேட்கிறார்.  

பிரதான வளைவைக் கடந்து கோயிலுக்குள் செல்வோம். நேரே தோன்றும் கருவறை விமானத்தை பிராகாரச் சுற்றாக தரிசிக்கலாம். இடப்புறம்  மூலவர், பின்புறம் சாந்த யோக நரசிம்மர், வலப்புறம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அந்த விமானத்தில் காட்சி தருகிறார்கள். திருவாழ்மார்பன் பெருமாள் கருவறைக்கு வலது பக்கம் ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் தனிச் சந்நதியில் கொலு விருக்கிறார்கள். இவர்களுடன்  விபீஷ்ணர், அனுமன், குலசேகர ஆழ்வார், அகத்தியரையும் சேர்த்து தரிசிக்கலாம். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார். கருவறைச் சுற்றில் கன்னிமூல விநாயகர் தரிசனமளிக்கிறார். அருகிலுள்ள சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 முதல் பகல் 1  மணிவரைதான் திறந்திருக்கும் என்கிறார்கள்; மாலையில் திறப்பதில்லையாம். இங்கு பகல் பத்து கிடையாது என்றும், ராப்பத்து மட்டும்தான்  அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளில் கருட சேவை விசேஷம்.

இங்கே ஒரு நடராஜர் விக்ரகத்தைப் பார்த்த போது வியப்பாக இருந்தது. மைனர் ஜடயாபுரம் என்ற தலத்தில் உள்ள கோயிலிலிருந்த இச்சிலை  இங்கே பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவதாகச் சொன்னார்கள். கருவறையில் திருவாழ்மார்பன், நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரதாரியாக, அமர்ந்த கோலத்தில், நெடிதுயர்ந்த தோற்றமாகக் காட்சியளிக்கிறார்.  அவரைச் சுற்றிலும் சப்த ரிஷிகள். இங்கே ரிஷிகள் எப்படி வந்தார்கள்? இந்த ஏழு ரிஷிகளும் திருமாலை தரிசிக்க வேண்டி தவமிருந்தார்கள். மலய பர்வதத்தின் தெற்குப் பகுதியில், ஞானாரண்யம் என்ற வனத்தில்,  பிரக்ஞா நதிக்கரையில் அத்ரி முனிவரின் தவச்சாலை ஒன்று இருந்தது. அங்கேதான் இவர்கள் தவம் மேற்கொண்டிருந்தார்கள். அப்போது ஓர்  அசரீரி கேட்டது:  ‘‘இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால், விஷ்ணு பாதம் என்று சொல்லப்படும் சோமதீர்த்தம் ஒன்று உள்ளது. அந்தக்  கரையில், அரசமரத்தடியில் ஓர் உயரிய தலம் அமைந்திருக்கிறது. அங்கு சென்று தவமியற்றினீர்களானால் உங்கள் எண்ணம் ஈடேறும்.’’ உடனே முனிவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்றார்கள்; தவமிருந்தார்கள்; அசரீரி பலிக்கக் கண்டார்கள். ஆமாம், அங்கே அவர்கள் எதிர்பார்த்த  மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அவர்களுக்கு தரிசனம் வழங்கினார். 

இந்தப் பெருமாள் திருவாழ்மார்பன் என்று  அழைக்கப்படுவதையும் அறிந்து கொண்ட அவர்கள், தங்களுக்குக் காட்சி கொடுத்ததைப் போலவே அனைத்து பக்தர்களுக்கும் இதே திருவாழ்மார்பனாக அவர் காட்சியளித்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சாட்சியாக இப்போதும் அவர்கள் அவருடைய கருவறையில் அவரைச் சூழ்ந்தி ருக்கிறார்கள். ஹிரண்ய சம்ஹாரத்துக்குப் பிறகு நரசிம்ம மூர்த்தியின் அடங்காத கோபம் அவரைப் பல இடங்களுக்கும் அலைக்கழிக்க, அப்படி இந்தத் தலத்துக்கு  வந்த அவரை மஹாலட்சுமி எதிர்கொண்டாள். உடனேயே சாந்தமானார் நரசிம்மர். அதுமட்டுமல்ல, இதே தலத்தில் அந்தத் திருமகளைத் தன்  மார்பகத்தில் ஏந்திக்கொண்டார்.  அதனாலேயே திருவாழ்மார்பன் என்ற பெயரும் கொண்டார். இப்படி பெருமாளோடு ஒன்றி விட்டதால்,  இக்கோயிலில் தாயாருக்கென்று தனிச் சந்நதி இல்லை. இந்தக் கருவறைக்கு வலது பக்கத்தில், ராமன் சந்நதி கொண்டிருப்பதற்கு விபீஷணன்தான் காரணம். 

அரங்கனை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக விபீஷணன் முயன்றபோது ஸ்ரீரங்கத்திலேயே அவர் நிரந்தரமாகப் பள்ளி கொண்டுவிட, ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் அவன் இத்தலம்  வழியாக வந்தான். அப்போது அவனுக்குக் காட்சி கொடுத்தார் திருவாழ்மார்பன். ‘உன் முக-அக வாட்டத்தைப் போக்க நான் உதவலாமா?’ என்று  பரிவுடன் வினவினார். தன் குறையை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று காத்திருந்த விபீஷணன், ‘என்னால் ராமபிரானை மறக்க முடியவில்லை. இங்கே அவரை மீண்டும்  தரிசிக்க விரும்புகிறேன். தங்களால் உதவ முடியுமா?’ என்று யாசித்தான். உடனே அங்கே வில்-அம்புடன் ராமர் தோன்றினார். உடன் சீதை, லட்சுமணன், அனுமன்! என்ன திவ்யத் திருக்காட்சி இது என்று புளங்காகிதம்  அடைந்தான் விபீஷணன். அவனுக்கு இவ்வாறு காட்சியளித்த ராமன்தான் இப்போது நம்மையும் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார்.

இங்கே அகத்தியரும் நமக்கு தரிசனம் தருவதற்கு நாம் ஆஞ்சநேயருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆமாம், அனுமனுடைய அன்பான வேண்டுகோளுக்கிணங்க, அகத்தியர் இங்கே ராமாயண மகாகாவியத்தை அருளினார்! குலசேகர ராஜன் என்ற குலசேகர ஆழ்வார், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோயிலைப் புனரமைத்திருக்கிறார். மதில் சுவர்கள் எழுப்பி,  வாகனங்களை உருவாக்கி, கொடிக்கம்பம் நிர்மாணித்து, கும்பாபிஷேகமும் செய்வித்து மகிழ்ந்திருக்கிறார். இந்த நன்றியை மறவாமல், அவருக்கும் ஒரு  சிலை உருவாக்கி அகத்தியருக்குப் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 
கோயிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம். அதற்கு இடப்புறம் ஒரு அரசமரம், அதனடியில் கட்டப்பட்ட மேடையில் விநாயகர் மற்றும்  நாகர்கள் அமைந்திருக்கிறார்கள். சோமதீர்த்தக் கட்டத்திற்குள் சூரியநாராயணன் தனியே சிறு சந்நதியில் நின்றிருக்கிறார். 

பக்கத்தில் சுதைச் சிற்பமாக  அக்னிமாடன். கோயில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் வடக்கே உடையநங்கையார் அவதரித்தப் பகுதியைக் காணலாம். நம்மாழ்வாரின் தாயாரின் இந்த ‘வீடு’,  இப்போது ஒரு பஜனை மடமாகத் தன் பணியை ஆற்றி வருகிறது. ‘நம்மாழ்வார் தாயகம்’ என்றழைக்கப்படும் இத்தலத்தில் உடையநங்கை  மூலவராகவும், உற்சவராகவும் வழிபடப்படுகிறார். நாலாயிர திவ்ய பிரபந்தங் களையே மீட்டுக் கொடுத்தப் பேரருளாளன் நம்மாழ்வாரின் தாய் இவர்  என்று நினைக்கும்போது எத்தகைய பேறு பெற்றிருக்கிறார் இவர் என்ற நெகிழ்ச்சி கண்களில் நீர் சுரக்கச் செய்கிறது.)

(நன்றி -தினகரன்)



No comments:

Post a Comment