Tuesday, May 31, 2016

6 - திருவெள்ளறை

                                           
புண்டரீகாட்சன் கோயில்

திருவெள்ளறை, திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும்.இங்கு புண்டரீகாட்சன் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாக பேருந்தில் செல்லலாம்.திருச்சி பஸ் நிலையத்திலிருந்தும் பஸ் வசதி உண்டு.

பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில் இது.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி காணப்படுகிறது.தாயார் செண்பகவல்லி என்னும் பங்கயச்செல்வி.தாயாருக்கு தனி சந்நிதி உண்டு.

ஸ்ரீரங்கத்தைவிட பழைமையான இத்த்லம் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.வெண்மையான பாறையிலால் ஆன மலை என பொருள் பட வெள்ளறை என்றும் திருவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.

திவ்யசந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்னிகா என ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள் அமைந்துள்ளன.

எங்குமில்லா வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும், தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன.தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபி சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என பெயர் ஏற்பட்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாக ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.ஸ்ரீதேவி,பூதேவி,சூர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில்  கைங்கர்யம் செய்வது தனிச் சிறப்பு.

ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை

இதில் ஸ்ரீதேவி நாச்சியார்க்கு "திருவெள்ளறை' தாயாருக்கு சிறப்பு அம்சம் உள்ள இத்தலத்தில் அவரை வணங்கிய பின்னரே, இறைவன் சந்நிதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடும், தாயார் பல்லக்கு முன்னே செல்ல, மூலவர் பல்லக்கு அதைத் தொடர்ந்து செல்லும்.(மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின் தொடர்வார்)

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மொத்தம் 24 பாசுரங்கள்

இந்திரனோடு பிரமன்
ஈசனிமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு
மறைந்துவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்நியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்

Monday, May 30, 2016

5 - உத்தமர் கோயில்

                                       

ஏறத்தாழ 1000 வருடங்களுக்கு முன்பானது  திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலாகும்.

திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருத்தலமான இதில் மும்மூர்த்திகளும் குடி கொண்டுள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்

இதைத்தவிர இத்தலம் தன்னகத்தே பல சிறப்புகளைக் கொண்டுள்ளது

கடம்பமரங்கள் அதிகம் இருந்தமையால் கடம்பனூர் என வழங்கப்பெற்று, பிறகு அதுவே கரம்பனூர் எனவும் திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.இதுவே வடமொழியில் நீப க்ஷேத்திரம் என்றானது.

புருஷோத்தமரும் எழுந்தருளியுள்ளதால் உத்தமர்கோயில் எனப் புகழ்ப் பெற்றது.சிவபெருமான் திருவோடு ஏந்தி பிச்சைக் கேட்ட திருக்கோலத்தில் உள்ளமையால் பிட்சாடனர் கோயில் (பிட்சாண்டவர் கோயில்) என்றும் பெயர் பெற்றது.

மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி க்ஷேத்திரம் எனவும் வழங்கப்படுகிறது.

பலமன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்துள்ளதாக இங்கு ணப்படும் குறிப்புகள் சொல்கின்றன.அவர்களுள் சோழமன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனும் அடங்குவர்.

முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே இல்லாமல் இருந்ததாகவும்,அதனால் எந்த நேரமும் இறைவனைத் தொழுதிட முடிந்ததாகவும் குறிப்பொன்றும் உள்ளது.

பெருமாள் சந்நதி , தாயார் பூர்வாதேவி பூர்ணவல்லி சந்நிதி ,சிவன் சந்நிதி,பார்வதி சந்நிதி,பிரம்மா சந்நிதி,சரஸ்வதி சந்நிதி என ஒவ்வொருவருக்கும் தனி சந்நிதி இத்தலத்தின் சிறப்பு.பெருமாள் கிழக்கு நோக்கிய புஜங்கசயனம்.

திருமங்கை ஆழ்வார், கதம்ப மகரிஷி,உபரிகிரவசு,சனகர்,சனந்தனர் முதலானோருக்கு பெருமாள் காட்சி தந்து அருளியுள்ள தலமாகும்

அப்பர், சுந்தரர்,திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களும் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளனர்.

108திவ்வியத் தலங்களான இக்கோயில், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வித்த கோயிலாகும்.அவரது பாசுரம் ஒன்று...

பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை  திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்திண் கடலேழு
மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே

தல விருட்சம் கதலி (வாழைமரம்) தீர்த்தம், கதம்ப தீர்த்தம்.

Thursday, May 26, 2016

4 - திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

                               

 திருச்சி திருமழிசை ஆழ்வார் விஷ்ணு


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

பெயர்
புராண பெயர்(கள்): திருஅன்பில் கோவில்
பெயர்: வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

அமைவிடம்

ஊர்: திருஅன்பில் கோவில்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

கோயில் தகவல்கள்
மூலவர்: வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்: தாரக விமானம்
கல்வெட்டுகள்: உண்டு
திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.


மங்களாசாசனம்
திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, May 25, 2016

3 - தஞ்சை மாமணிக் கோயில்

                                             

 தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற  இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் இருக்கிறது.

இறைவன், இறைவி பற்றிய விவரங்கள்[

தஞ்சை மாமணிக் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நீலமேகப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: செங்கமலவல்லி. தீர்த்தம்:கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு இக்கோயிலின் விமானம் சௌந்தாய விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.

அவற்றுள் ஒரு பாடல்:

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து
விளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம். இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.

தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.


நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற வைணவத் திருத்தலம் இதுவாகும். தஞ்சையைப் பார்த்த வண்ணம் இறைவன் சிலைகள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணியென்றும் போற்றப்படுகிறது.

Sunday, May 22, 2016

2 - திருக்கோழி (உறையூர்)

                                     


உறையூர் அழகிய மணவாளர் கோயில்


புராண பெயர்(கள்): திருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர்

அமைவிடம்
ஊர்: உறையூர்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா


கோயில் தகவல்கள்
மூலவர்: அழகிய மணவாளன்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி
ஆகமம்: பாஞ்சராத்ரம்
பிரத்யட்சம்: ரவிதர்மா, கமலவல்லி.
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு
----------------------------------
துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்
கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது
.
சிறப்பு
--------------------------
திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.

திருக்கோழி பெயர்க்காரணம்

சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.


திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.

1 - திருவரங்கம்

                                           

திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்

ஊர்: திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: அரங்கநாதர் (விஷ்ணு)
உற்சவர்: நம்பெருமாள்
தாயார்: ரங்கநாயகி
தல விருட்சம்: புன்னை
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம் , ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம் ,புன்னாக தீர்த்தம்
ஆகமம்: பாஞ்சராத்திரம்

பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


தல வரலாறு
--------------------------------------
திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.


கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

 கோயில் அமைப்பு
---------------------------------------
இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

திருச்சுற்றுகள்
--------------------------------------------
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

மதில் சுற்றுகள் ஏழு உலகங்கள்
மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று பூலோகம்
திரிவிக்ரம சோழன் சுற்று புவர்லோகம்
அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று ஸுவர்லோகம்
திருமங்கை மன்னன் சுற்று மஹர்லோகம்
குலசேகரன் சுற்று ஜநோலோகம்
ராஜ மஹெந்திர சோழன் சுற்று தபோலோகம்
தர்ம வர்ம சோழன் சுற்று ஸத்யலோகம்

நவ தீர்த்தம்
---------------------------

சந்திர புஷ்கரணி
வில்வ தீர்த்தம்
சம்பு தீர்த்தம்
பகுள தீர்த்தம்
பலாச தீர்த்தம்
அசுவ தீர்த்தம்
ஆம்ர தீர்த்தம்
கதம்ப தீர்த்தம்
புன்னாக தீர்த்தம்

தெற்கு ராஜகோபுரம்
------------------------------------

மொட்டைகோபுரம் முந்தைய தோற்றம்

ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதசுவாமி கோயில் இராஜகோபுரம்.
கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1]

ராஜகோபுரம் கட்டுமானம்
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

சங்க இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்
---------------------------------------------------------------------------
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.


சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

திருமங்கை ஆழ்வார் 73

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55

பெரியாழ்வார் 35

குலசேகராழ்வார் 31

திருமழிசையாழ்வார் 14

நம்மாழ்வார் 12

திருப்பாணாழ்வார் 10

ஆண்டாள் 10

பூதத்தாழ்வார் 4

பேயாழ்வார் 2

பொய்கையாழ்வார் 1

9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.

105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.

திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.

அம்மா மண்டபம் முகப்பு
-----------------------------------------

திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன.


வைகுண்ட ஏகாதேசி
======================
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.


இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

108 வைணவத் திருத்தலங்கள்

                                           


திருமால் திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

சோழநாட்டு திருப்பதிகள் - 40
தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
நடுநாட்டு திருப்பதிகள் - 2
நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
வடநாட்டு திருப்பதிகள் - 11
108 வைணவத் திருத்தலங்கள்
தொடர் எண்
01. திருவரங்கம்
02. திருக்கோழி, (திரு உறையூர்)
03. திருத்தஞ்சை
04. அன்பில் (திருச்சி)
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளறை
07   புள்ளபூதங்குடி (குடந்தை)
08. கோயிலடி
09. ஆதனூர் (குடந்தை)
10. தேரழுந்தூர் (குத்தாலம்)
11. சிறு புலியூர்(சீர்காழி)
12. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் (குடந்தை)
13. தலைச்சங்காடு (சீர்காழி)
14. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
15. கண்டியூர் (தஞ்சை)
16. ஒப்பிலியப்பன் (குடந்தை)
17. திருக்கண்ணபுரம் (சீர்காழி)
18. திருவாலி, (சீர்காழி)
19. நாகப்பட்டினம் (திருநாகை)
20. நாச்சியார்கோயில் (குடந்தை)
21. நாதன் கோயில் (குடந்தை)
22. திருஇந்தளூர் ,மாயவரம் (மாயவரம்)
23. திருச்சித்ரகூடம், (சீர்காழி)
24. திருக்காழிச்சீராம விண்ணகரம்,(சீர்காழி)
25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)
26. திருக்கண்ணங்குடி (சீர்காழி)
27. திருக்கண்ணமங்கை (குடந்தை)
28. கபிஸ்தலம் (குடந்தை)
29. திருவெள்ளியங்குடி (குடந்தை)
30. திருமணிமாடக் கோயில் (சீர்காழி)
31    வைகுந்த விண்ணகரம் (சீர்காழி)
32. அரிமேய விண்ணகரம் (சீர்காழி)
33. திருத்தேவனார்த் தொகை (சீர்காழி)
34. வண்புருடோத்தமம் (சீர்காழி)
35. செம்பொன் செய்கோயில் (சீர்காழி)
36. திருத்தெற்றியம்பலம் (சீர்காழி)
37. திருமணிக்கூடம் (சீர்காழி_
38. திருக்காவளம்பாடி (சீர்காழி)
39. திருவெள்ளக்குளம் (சீர்காழி)
40. திருப்பார்த்தன் பள்ளி (சீர்காழி)
41. திருமாலிருஞ்சோலை (மதுரை)_
42. திருக்கோஷ்டியூர் (திருகோஷ்டியூர்_
43. திருமெய்யம் (புதுக்கோட்டை.)
44. திருப்புல்லாணி (இராமநாதபுரம்)
45. திருத்தண்கால் (மதுரை)
46. திருமோகூர் (மதுரை)
47. கூடல் அழகர் கோயில் (மதுரை)
48. ஸ்ரீவில்லிபுத்தூர் (மதுரை)
49. ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்)
நவதிருப்பதி (நெல்லை)
50. திருத்துலைவில்லி மங்கலம்
இரட்டைத் திருப்பதி
நவதிருப்பதி (நெல்லை)
51. வானமாமலை (நெல்லை)
(52. திருப்புளிங்குடி
நவதிருப்பதி (நெல்லை)
53. திருப்பேரை
நவதிருப்பதி (நெல்லை_
54. ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதி (நெல்லை)
55. திருவரகுணமங்கை (நத்தம்)
நவதிருப்பதி (நெல்லை)
56. திருக்குளந்தை
நவதிருப்பதி (நெல்லை)
57. திருக்குறுங்குடி (நெல்லை)
58. திருக்கோளூர்
நவதிருப்பதி (நெல்லை)
59. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் (கோவளம்)
60. திருவண்பரிசாரம் (கன்னியாகுமரி)
61. திருக்காட்கரை (கோட்டயம்)_
62. திருமூழிக்களம் (கோட்டயம்)
63. திருப்புலியூர் ( கோட்டயம்)
64. திருச்செங்குன்றூர் ( கோட்டயம்)
65. திருநாவாய் ( திருச்சூர்)
66. திருவல்லவாழ் (கோட்டயம்)
67. திருவண்வண்டூர் ( கோட்டயம்)
68. திருவட்டாறு (கன்னியாகுமரி)
69. திருவித்துவக்கோடு (திருச்சூர்)
70. திருக்கடித்தானம் (கோட்டயம்)
71. திருவாறன்விளை (கோட்டயம்)
72. திருவயிந்திபுரம் (கடலூர்)
73. திருக்கோவலுர் (கடலூர்)
74. திருக்கச்சி (காஞ்சி)
75. அட்டபுயக்கரம் (காஞ்சி)
76. திருத்தண்கா(தூப்புல்) (காஞ்சி)
77. திருவேளுக்கை (காஞ்சி)
78. திருப்பாடகம் (காஞ்சி)
79. திருநீரகம் (காஞ்சி)
80. நிலாத்திங்கள் (காஞ்சி)
81. திரு ஊரகம் (காஞ்சி)
82. திருவெக்கா (காஞ்சி)
83. திருக்காரகம் (காஞ்சி)
84. திருக்கார்வானம் (காஞ்சி)
85. திருக்கள்வனூர் (காஞ்சி)
86. திருப்பவள வண்ணம் (காஞ்சி)
87. திருப்பரமேச்சுர விண்ணகரம் (காஞ்சி)
88. திருப்புட்குழி (காஞ்சி)
89. திருநின்றவூர் (சென்னை)
90. திரு எவ்வுள் (சென்னை)
91. திருநீர்மலை (சென்னை)
92. திருவிடவெந்தை (சென்னை)
93. திருக்கடல்மல்லை (சென்னை)
94. திருவல்லிக்கேணி (சென்னை)
95. திருக்கடிகை (சோளிங்கர்) சென்னை
96. திருவேங்கடம் (ஆந்திரம்)
97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) ஆந்திரம்
98. திருவயோத்தி உத்தரப் பிரதேசம்
99. நைமிசாரண்யம் உத்தரப் பிரதேசம்
100. முக்திநாத் ஸ்ரீமூர்த்தி நேபாளம்
101. பத்ரிகாச்ரமம் உத்தராகண்டம்
102. தேவப்ரயாகை உத்தராகண்டம்
103. திருப்பிரிதி உத்தராகண்டம்
104. திருத்துவாரகை குஜராத்
105. வடமதுரை டெல்லி
106. ஆயர்பாடி டெல்லி
107. திருப்பாற்கடல் புவியில் இல்லை
108. பரமபதம் நாதன் திருவடி
பெருமாள் பார்வை படும் திசைகள்
108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.

பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு 79
மேற்கு 19
வடக்கு 3
தெற்கு 7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு 40
பாண்டிய நாடு 18
மலை நாடு 13
மத்திய நாடு 2
தொண்டை நாடு 22
வட நாடு 11
வானுலகம் 2

இனி ஒவ்வொரு திருத்தலங்கள் பற்றிக் காண்போம்