Thursday, June 30, 2016

43 - திருமயம்


                                   


சத்தியபெருமாள் கோயில்

மூலவர் - சத்தியமூர்த்தி, திருமெய்யர்

உற்சவர் - அழகியமெய்யர்

தீர்த்தம் - சத்யபுஷ்கரணி

விருட்சம் - ஆலமரம்

புதுக்கோட்டையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமயம் எனும் திருமய்யம் கோயில்

இத்தலத்தில், சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.சைவ, வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்தியகிரீஸ்வரர் (சிவன்) கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளது

திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைவிட் மிகப்பழமையானது.அதுகாரணமாக இத்தலத்திற்கு ஆதிரங்கம் என்றும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சத்திய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்.

இக்கோயில் பல்லவ காலத்து குடவரை கோயிலாகும்.திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லினால் அமைந்த இக்குடைவரைக் கோயிலில் இரண்டு பெருமாள் சந்நிதிகள்.வேலைப்பாடமைந்த சத்தியமூர்த்திக் கோயில் அவற்றில் ஒன்று.இக்கோயிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது.எனவே, இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலை தனியே சுற்றி வர முடியாது.
காரணம் மூலவர் கோயில் குடைவரைக்கோயிலாக அமைந்துள்ளதேயாகும்

சதுர்யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறுயுகம் பிறக்கும் காலச்சக்கரத்தைக் குறிக்கும் அளவு.இந்த அளவின்படி திருவரங்கத்துப் பெருமாள் 64சதுர்யுகங்களுக்கு முன்னால் தோன்றினார்.ஆனால் சத்தியகிரிநாதன் 96 சதுர்யுகங்களுக்கு முன் தோன்றியவராதலால் திருமய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் சோமசுந்தர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி என்ற பெயரைத் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மறுகரத்தில் சக்கரத்துடனும் எம்பெருமாள் அருள்பாலிக்கின்றார்.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாய் துணை நிற்பார் என இறைவன் வாக்குறுதி தந்ததால் இறைவனுக்கு சத்தியமூர்த்தி எனப் பெயர் வந்தது.3

இக்கோயிலின் மூலவர் யோகசயனமூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரைவிட மிகப்பெரியது.இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் உயரம் இந்தியாவிலேயே கோயில்களில் உள்ளவற்றில் பெரியது.சுற்றிலும் தேவர்கள்,ரிஷிகள்,பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா, மார்பில் குடியிருக்கும் லட்சுமி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார்.மூலவரான பெருமாளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது.மது, கைடபர் எனும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்வதாக தல வரலாறு

பெருமாள், யோக நித்திரையில் இருக்கையில், அவ்வரக்கர்கள் ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோரை அபகரிக்க முயன்றனர்.இதனால் அவர்கள் ஓடி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்தனர்.பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என, அவரை எழுப்பாமல் ஆதிஷேசன் எனும் ஐந்து தலை நாகம் விஷத்தைக் கக்க அசுரர்கள் ஓடி ஒளிந்தனர்.பின் கண் விழித்த பெருமாள் ஆதிஷேசனை மெச்சிப் புகழ்ந்தார்

திருமெய்யம் குன்றின் தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும், சிவனுக்கும் அடுத்தடுத்து திருக்கோயில்கள் உள்ளன.இக்கோயில்கள் சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணம் எனலாம்

இக்கோயில் சத்யபுஷ்கரணி அனைத்து பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்தது.

தாயார் உஜ்ஜீவனத் தாயார் (ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்)
இவர் வீதி உலா வருவதில்லை.கோயிலுக்குச் சென்றால் மட்டுமே தரிசிக்க முடியும்.


No comments:

Post a Comment