Tuesday, June 7, 2016

15 - கண்டியூர்


                                   

ஹரசாப விமோசன பெருமாள் - கமலநாதன்

உற்சவர் - கமலநாதன்
தாயார்- கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்- கபால மோட்ச புஷ்கரிணி

புராண பெயர் - கண்டன க்ஷேத்திரம், பஞ்சகமல க்ஷேத்திரம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இத்தலத்தில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இத்தல இறைவன் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.இவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. அகத்தியர், இத்தல இறைவனை தரிசனம் செய்துள்ளனர்

சிவனுக்கு, ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாம தேவம்,சத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள் உண்டு.இதுபோல பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது.அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தான்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளி எறிந்தார்.இந்த பிரம்மஹத்தி தோஷத்தைத் தொலைக்க கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.ஒரு இடத்தில் அந்த கபாலம் வீழ்ந்தது.அங்கே விஷ்ணு இருந்தார்.அந்தத் தலமே பூர்ணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலாகும்.

சிவனின் சாபம் தீர்ந்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார்.இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது.இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார்.அவருக்கு கண்டீஸ்வரர் எனப் பெயர்.

பிரம்மனுக்குக் கோயில் கிடையாது என்பதால் கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதரமாக பிரம்மன் உள்ளார். 

Monday, June 6, 2016

14 - கும்பகோணம் (சாரங்கபாணி சுவாமி கோயில்)

 
                                    சாரங்கபாணிக் கோயில் தேரோட்டம் (உள்படம்- சாரங்கபாணி)


ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாகப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தம் விளைந்ததாகக்  கருதப்படும் பெருமையை உடையது.ஆழ்வார்கள், இப்பெருமாளை குடந்தைக் கிடந்தான் என வர்ணயிக்கின்றனர்.இக்கோயிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கப்பட்டிணம்,ஸ்ரீரங்கம்,திருப்பேர் நகர்,மயிலாடுதுறை)

கும்பகோணத்தில் உள்ள மிகப்பழைமையான கோயில் இது.இக்கோயிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது.அதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும் கல்லால் ஆனவை.இக்கல்தேர் ஒரு சிறந்த, அற்புத கலைப்படைப்பு எனலாம்.இக்கோயிலின் மற்ற சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லின் சிறப்புப் பெயராகும்.பாணி என்றால் கையில் ஏந்தியவன் என்று பொருள்.

தவிர்த்து, சாரங்கம் என்பது பல பொருள்களையுடைய சொல்லாகும்.சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.சாரங்கபாணி என்பது நேராக திருமாலைக் குறிக்காது.ஆனாலும்..சார்ங்கபாணி என பெருமாளை உச்சரித்த மக்கள் சாரங்கபாணி என்றே அழைக்க ஆரம்பித்தனர் எனலாம்

இக்கோயிலின் முன்மண்டபத்து தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர மன்னர் விருப்பண்ண உடையாருக்கு உரியதாகும்.இக்கல்வெட்டின் காலம் கிபி 1385. இக்கல்வெட்டில்தான் முதன்முறையாக இவ்வூர் கும்பகோணமென உள்ளதெனலாம் (குடந்தை என்பதே இதன் பெயராகும்)

மூலவர் - சாரங்கபாணி(ஆராவமுதன்)
உற்சவர்- நான் கு   திருக்கைகளுடன் , சங்கு, சக்கரம்,கதை, சார்ங்கம் என்னும் வில்,உடைவாள் ஆகிய ஐந்து ஆயுடஹ்ங்களுடன், வலது கை அபயமளிக்கும் முத்திரையுடன் கம்பொன் சுடராக வேறு எங்கும் காணக்கிடைக்கா அழகுடன் காணப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்தரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
நாபியில் பிரம்மா...தலைப்பகுதியில் சூரியன்
கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தாயார் - கோமளவல்லி

தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி. காவிரி, அரசலாறு

பன்னிரு ஆழ்வார்கள், ஆண்டாள், திருமழிசையாழ்வார்,திருமனகையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர் இப்ப்ருமாளைப் பாடியுள்ளார்கள்

பெரியாழ்வார்....

தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர்தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தை கிடந்தானே சப்பாணி

    என பாடியுள்ளார்.

இக்கோயிலின் தேர் சித்திரைத் தேர் என அழைக்கப்படுகிறது.தமிழகத்துக் கோயில்களில் இது மூன்றாவது பெரிய தேர் ஆகும்

திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு இணையாகப் புகழ் பெற்றது.இதன் எடை 500 டன்.அடிப்பாகம் 25 அடி.மேல்தட்டு 35 அடி, உயரம் 30 அடி.அலங்கரிக்கும் போது தேர் 110 அடியாகும்.11 நிலைகளைக் கொண்டது இத்தேர்

13 - திருத்தலைச்சங்காடு

இத்தலத்தில் இறைவன் 3அடி உயரத்தில் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தைன் மயிர்க்கால்கள் தெரியும்.

                               

அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்


ஒரே சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் தரிசங்கம் இங்குக் கிடைக்கிறது.சங்கநிதி,பதுமநிதி இருவரும் கோயில் நுழைவாயிலில் வரவேற்கின்றனர்.கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டியுள்ளான்.அதில் யானை நுழைய முடியாத அளவிற்கு கோயில்களும் கட்டியுள்ளான்.அப்படிப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.கோயில் அமைப்பே சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ளது.அதாவது, கோயிலில் இடது பக்கம் சிவன் சந்நிதி,நடுவில் முருகன் சந்நிதி, வலப்பக்கம் அம்மன் சந்நிதி.

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களைக் காக்க சங்கரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமான சங்கைப் பெற்றார்.இத்தலத்தில் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி உண்டு.

தலைச்சங்காடு  அல்லது திருதலைச்சங்கநாண்மதியம் எனப்படும் இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும், அதனைச் சார்ந்த உறுக்கும் பெயரை வைத்திருக்கின்றனர்.எனவே தலை+சங்கு+காடு = தலைச்சங்காடு. சங்கு பூக்கள் மிகுதியாகத் தோட்டத்தில் பயிரிட்டு கோயில்களுக்கு அனுப்பப்பட்டதால் இப்பெயர் என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

திருமால், உலக உயிரைக் காக்க சங்காரண்யேஸ்வரரை பூஜித்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார்.திருமாலுக்கு,பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கியக் காரணத்தால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதன் என அழைக்கப்படுகிறார்.

திருமங்கையாழ்வார் இக்கோயில் பற்றி இரு பாசுரங்கள் எழுதியுள்ளார்.

மூலவர் - நாண் மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)
உற்சவர்- வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்-தலைச்சங்க நாச்சியார்  (சவுந்தர நாயகி)
உற்சவர் தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சங்கரபுஷ்கரணி 

Sunday, June 5, 2016

12 - திருச்சேறை

                                     

சாரநாதப் பெருமாள் கோயில்

கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.கும்பகோணத்திலிருந்து, திருவாரூர் செல்லும் பேருந்துகள் இதன் வழி செல்லும்.

இக்கோயில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனலாம்.
380 அடி நீளமும் 234அடி அகலமும் கொண்டுள்ளது.கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் 90அடி உயரமானது.எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்குக் கரையில் அகத்தியர்,பிரம்மா,காவிரி,ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.உள்சுற்றில் ஸ்ரீனிவாச பெருமாள்,நம்மாழ்வார்,உடையவர்,கூரத்தாழ்வார், ராமர்,அனுமான், ராஜகோபாலன்,ஆண்டாள்,சத்திய பாமா,ருக்மணி,நரசிம்ம மூர்த்தி,பாலசாரநாதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் சாரநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக உள்ளார்.இக்கோயிலில் மட்டுமே பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி, லட்சுமி,சாரநாயகி, நீளாதேவி என ஐந்து தேவியருடன் கணப்படுகிறார்.இத்தலத்து மண் மிகவும் சாரம் (சத்து)  நிறைந்தது எனவும்..அதனாலேயே சாரநாதர் ஈன் பெருமால் அழைக்கப்பட்டார் என்றும் வரலாறு.திருச்சாரம் மருவி திருச்சேறை ஆனது.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயனும், இடது பக்கம் காவிரித்தாயும் அமைந்துள்ளனர்.

ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த  மகாவிஷ்ணு, பிரம்மனை அழைத்து பிரளய காலம் வருகிறது.நீ பூலோகம் சென்று ஒரு புண்ணியத் தலத்தில் மண்ணெடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் எனக் கட்டளையிட்டார்.

பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்த வண்ணம் இருக்க, மகாவிஷ்ணுவை பிரம்மன் வேண்ட, திருமால், பூலோக முக்கியத் தலங்களில் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து செய் என்றார்.

பிரம்மனும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார்.

இதத்தவிர்த்து காவிரித்தாயின் தவத்தின் பயனாக பெருமாள் அவரது மடியில் குழ்ந்தையாக திகழ்ந்ததோடு அல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி,நீளாதேவி, மகாலட்சுமி,சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்தத் தலம் என்பதும் மரபு வழி வரலாறாகும்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் தஞ்சையைஅ அண்ட நாயக்க மன்னன், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமிக்கு ஒரு கோயில் அமைக்கத் தீர்மானித்தார்.அதற்கான பொறுப்பை தன் அமைச்சரான
நரச பூபாலனிடம் அளித்தார்.பூபாலன், சாரநாதரின் பக்தர்.திருச்சேறையில் கோயில் அமைகக் விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக் கோயிலுக்கு கற்களை கொண்டு செல்லும் வண்டிகள், ஒவ்வொன்றிலும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிடும்படிக் கூறினான்.இதையறிந்த மன்னன் கோபத்துடன் திருச்சேறை சென்றான்.அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதர்...ராஜகோபாலனாய்க் காட்சியளித்தார் என்பதும் இத்தலம் குறித்து மரபு வழி வரலாறாகும்

ஒருமுறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என்று கேட்டு, இத்தல சாரபுஷ்கரணியில் மேற்குக் கரை அரசமரத்தடியில் தவம் இருந்தாள். பெருமாள் மகிழ்ந்து, குழ்ந்தைவடிவில்
காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.பின் கருட வாகனத்தில் சங்கு, சக்கரதாரியாக ஐந்தௌ லட்சுமிகளுடன் காட்சித் தர, காவிரியும், எப்போதும் இதுபோலக் காட்சியளிக்க வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு  இடப்பக்கத்தில் காவிரித்தாய் இருப்பதைக் காணலாம்.

திருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து பாசுரங்கள் பாடியுள்ளார்.

மூலவர்   - சாரநாதர்
தாயார்.- சாரநாயகி
தீர்த்தம்- சார புஷ்கரணி
உற்சவர்- ஸ்ரீசாரநாதப் பெருமாள்

Saturday, June 4, 2016

11 - சிறுபுலியூர்

                                     

நாகப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது சிறுபுலியூர்.

கருடனும், அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள்.பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கரியம் செய்யும் நித்யசூரிகள் ஆயினும் பகைவர்கள்.சிறுபுலியூர் திவ்விய தலத்தின் தலவரலாறு கருட-நாக பகையை அடிப்படையாகக் கொண்டது.

பகவான் ஸ்ரீநாராயணனை சயனத்தில் தான் தாங்குவதாக ஆதிசேஷனும், அவரை எல்லா இடங்களுக்கும் தாமே சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம்  ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்து பகையாக மாறியது.

ஆதிசேஷன் இப்பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார்.அத்தவத்திற்கு இரங்கி பெருமான் ஆதிசேஷன் மடியில் சயனம் கொண்டு சிறுகுழந்தையாக பால சயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.அதாவது பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டிருக்கும் கோலம்.கருடனுக்கும் அபயமளித்த தலம்.இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேஷனும், பூமிக்குக் கீழே கருடன் சந்நிதியும் அமைந்துள்ளது.

(கருடா சௌக்கியமா? என்றதற்கு, அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட தலமாகக் கொள்ளலாம்)

சலசயனம், பாலவியாக்ரபுரம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்ற பெயர் ஏன்?
வியாக்ரபாரதர்  என்ற முனிவர்...சிதம்பரத்தில் தவம் செய்து தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டினார்.மோட்சம் கிடைக்க வல்லுநர் பெருமாளே என நடராஜர் கூற..அவ்வாறாயின் அதற்குரியத் தலத்தை காண்பிக்குமாறு முனிவர் வேண்டினார்.நடராஜர், சிவலிங்க ரூபமாக வழி காட்ட..அவரை விரைந்து பின்பற்ற தான் பெற்ற தவ வலிமையால் முனிவர் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்றார் என்றும் , அதனால் சிறுபுலியூர் என அழைக்கப் படுவதாக சொல்வர்.

பெருமாளைக் கண்டு, அந்த பிரம்மாண்டமான தோற்றம் பார்த்து வியாக்ரபாரத முனிவர் பிரமிப்பு அடைந்தார்.அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால் காணமுடியும்? எப்படிக் கரங்களால் தீண்டி இன்புற முடியும்?

அவரது தர்ம சங்கடத்தைக் கண்ட பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம்  தன்னை சுருக்கி கொண்டார்.

புலியாருக்காக சிறுவடிவு எடுத்து பெருமாள் மாறியதாலும் சிறுபுலியூர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

இச்சிறு கோலத்திலும், தன் நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தாங்கியுள்ளார்.திருவடிக்கு அருகே ஸ்ரீதேவியுடன், சிறுவடிவில் புலிக்கால் முனிவரும், கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.

மூலவர்- சலசயனப் பெருமாள் . தெற்கே திருமுக மண்டலம்..புஜங்க சயனம்

உற்சவர் -கிருபா சமுத்தியப் பெருமாள்

தாயார் - திருமாமகள்  நாச்சியார்

உற்சவர் - தயாநாயகி

தீர்த்தம் - மானச புஷ்கரணி

108 திவ்வியத் தலங்களில் பெருமாள் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்தத் தலங்கள் இரண்டு.

முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவத்தில் அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்

இரண்டாவது தலமான இங்கு...பால சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார்.

பிரம்மாண்டமான பெருமாள், புலிக்கால் முனிவருக்காக தன்னை சுருக்கிகொண்டது திருமங்கையாழ்வாருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாம்.அவரை சமாதானப்படுத்த, பெருமாள் அசரீரியாக "நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக!? என்று அருளினார்.

திருவனந்தபுரத்தில், தலையை இடது ஓரத்துக்கும் வலது ஓரத்துக்குமாக அசைத்து திருமாளை தரிசிக்க வேண்டிய நிலையில், திருக்கண்ணமங்கலத்தில் தலையை கீழிருந்து மேலாக கழுத்தை வளைத்து தரிசிக்க வேண்டியது அவசியம்.

Friday, June 3, 2016

10 - திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

                                                   


தேவாதிராஜன் கோயில்

ஒருமுறை பெருமாளும், சிவனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார்.காய் உருட்டும் போது நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு சாதகமாகக் கூற சிவனுக்குக் கோபம் வந்து பார்வதியை பசுவாக மாறும் படி சாபமிட்டார்.துணைக்கு சரஸ்வதியும்,லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள்.இவர்களை மேய்ப்பவராக பெருமாள் "ஆ"மருவியப்பன் என்ற நாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி புரிகிறார்.

மூலவர் பெருமாள் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர்.மூலஸ்தானத்தில் பார்வதி பசுரூபத்தில் உள்ளனர்.மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற ஆ மருவியப்பனை வணங்கினார்.அத்னால் அவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.பக்த பிரஹலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார்.மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாவிக்கின்றனர்.மூலவர் மேல் உள்ள விமானம் கருட விமானம்.தர்ம தேவதை,உபரிசரவசு,காவிரி, கருடன்,அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

இத்தலத்தில் திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.இக்கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது.அங்குதான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.

இத்தலத்தில்தான் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்தார்.

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேரில் வரும் போது, அதன் நிழல் எதில் பட்டாலும் அது கருகி விடும் வரம் பெற்றிருந்தான்,அவன் மேலே சென்றபோது, அதன் நிழல் கண்ணனின் மீதும்...அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது.பசுக்கள் துன்பம் அடைந்தன.மன்னன் செருக்கை அடக்க நினைத்த கண்ணன், அவன் தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார்.மன்னனின் தேர் கீழே அழுத்தியது.அத்துடன் அவன் ஆணவமும் அழிந்தது.இதனால்தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.

ஒருமுறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும், வைரமுடியையும் கொடுத்து 108 திருப்பதிகளுக்குள் எந்த பெருமாளுக்காவது உகந்ததாக அதைக் கொடுத்துவிடு என்றார்.அதன்படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைரமுடியைக் கொடுத்துவிட்டு...தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தைக் கொடுத்தார் கருடன்.அதனால் இங்குள்ள விமானம் கருடவிமானம் ஆயிற்று.அத்துடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.(பெரும்பாலான கோயில்களில் கருடன் சந்நிதி பெருமாளின் எதிரில் இருக்கும்)

இக்கோயிலின் மூலவர் தேவாதிராஜன்
உற்சவர்- ஆமருவியப்பன்
தாயார் செங்கமலவல்லி
தீர்த்தம், தர்சன புஷ்கரணி, காவிரி

Thursday, June 2, 2016

9 - ஆதனூர்

                               
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது இக்கோயில்.

பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளை சந்திக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை தந்தார்.பிருகு முனிவர் அம்மாலையை இந்திரனுக்குத் தர, அவனோ அதை தன் யானை ஐராவதத்தின் மீது வைக்க...அந்த மாலையை அது தூக்கி வீசியது.இதனால் கோபமடைந்த முனிவர், இந்திரனை பூமியில் மனித்னாகப் பிறக்க சபித்துவிடுகிறார்.தன் சாபம் நீங்க, மகாலட்சுமையை இந்திரன் வேண்ட, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகத் தான் அவதரிக்கப் போவதாகவும், அந்த அவதாரத்தில் புருமாளுடன் தனக்கு நடக்கும் திருமணத்தை இந்திரன் காணுகையில் சாபம் நீங்கும் என்றும் கூறுகிறாள்.இப்படியாக இந்திரன் சாபம் நீங்குவதாக மரபு வழி வரலாறு உண்டு.

இத்தலத்தின் சிறப்பு என்னவெனில்...

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாம்.அவர் பெருமானை வேண்ட, அவர் கனவில் தோன்றிய பெருமான், கொள்ளிடக்கரையில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படிக் கூறினார்..திருமங்கையாழ்வாரும் கொள்ளிடக் கரைக்கு வந்தார்.அங்கு, தலைப்பாகையுடன் ஒரு வணிகரை சந்தித்தார்,.அவ்வணிகரிடம் ஒரு காலி மரக்கால், ஏடு, எழுத்தாணி இருந்தது.

அவர், ஆழ்வாரிடம், இறைவன் அவருக்கு உதவ தன்னை அனுப்பியதாகக் கூறி...பணியாளர்களுக்குக் கூலியாக அக்காலி மரக்காலில் மணலை அளந்து கொடுத்தால், உண்மையாய் உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், உழைக்காமல் ஏமாற்றியவருக்கு மணலாகவும் தோன்றும் என்றார்.

அவ்வாறே..ஆழ்வார் மரக்காலில் மணலை அளந்து கொடுத்த போது சிலருக்கு பொன்னாகவும், சிலருக்கு மணலாகவுமே இருந்தது.மணலைப் பெற்றவர்கள் அடிக்க வர...வணிகரும் ஓட...ஆழ்வாரும் அவர் பின்னால் ஓடினார்.வணிகர் இத்தலத்தில் வந்து நின்று, வணிகராக வந்தது தானே என பெருமான் உணர்த்தி ., எழுத்தாணியால் ஏட்டில் எழுதி ஆழ்வாருக்கு உபதேசித்தருளினார்.

இதனைக் குறிக்கும் விதமாக, இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக் கீழ் வைத்து, ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிக் கொண்டக் கோலத்தில் உள்ளார்.

இலங்கை செல்லும் முன் ஸ்ரீராமனும், ஆஞ்சநேயரும் இங்கு வந்துத் தங்கி சென்ற இடமுமாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் பள்ளிக்கொண்டக் கோலத்தில் காட்சித் தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளிக்கும் ஐயன் என அழைக்கப் படுகிறார்.கருவறையில் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூ தேவியுடன் தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ பள்ளிக்கொண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.மரக்காலைத் தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணியும்..ஏடும் கொண்டுள்ளதால் பெருமானின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாக படுத்துக் கொண்டக் கோலம் என அழைக்கப் படுகிறது.

இக்கோயிலில் அரங்கனின் நாயகி தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு நோக்கி காமதேனு தவம் இருந்தது.அதனால்,ஆதனூர் என்று பெயர். (ஆ...தன்..ஊர்)

மூன்று நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோயிலில், காமதேனுவிற்கும், காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

பரமபதத்தில் மாகாவிஷ்ணுவின் முன்பாக இரு தூண்கள் இருக்கும்.மனித உடலில் இருந்து ஆன்மா இவ்விரு தூண்களையும் தழுவ மோட்சம் பெறும் என்பது ஐதீகம்.அதுபோன்று இரு தூண்கள் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள அர்த்த மண்டபத்தில் பெருமாளின் பாதம் மற்றும் தலைக்கு எதிரில் உள்ளன.

இரட்டைப்பட எண்ணிக்கையில்  வலம் வந்து, இத்தூண்களைப் பற்றிக் கொண்டு, பெருமாளின் பாதத்தையும்,திருமுகத்தையும் தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கோயிலுக்கான த்னிப் பாசுரம் ஏதும் இல்லை.திருமங்கையாழ்வார் திருமடலில் ஒருவரியில் இக்கோயிலைக் குறிப்பிட்டுள்ளார்

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளிக்கும் ஐயனை

என் கிறார்.

தல விருட்சம் பாடலி மரம்.தீர்த்தம்- surya புஷ்கரணி, தாமரைத் தடாகம்