Saturday, September 19, 2020

62 - திருமூழிக்களம்


 

திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. 

திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. 

இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி: மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம்,பூர்ண நதி ஆகியன. விமானம்:சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. 

நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.