Monday, May 30, 2016

5 - உத்தமர் கோயில்

                                       

ஏறத்தாழ 1000 வருடங்களுக்கு முன்பானது  திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலாகும்.

திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருத்தலமான இதில் மும்மூர்த்திகளும் குடி கொண்டுள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்

இதைத்தவிர இத்தலம் தன்னகத்தே பல சிறப்புகளைக் கொண்டுள்ளது

கடம்பமரங்கள் அதிகம் இருந்தமையால் கடம்பனூர் என வழங்கப்பெற்று, பிறகு அதுவே கரம்பனூர் எனவும் திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.இதுவே வடமொழியில் நீப க்ஷேத்திரம் என்றானது.

புருஷோத்தமரும் எழுந்தருளியுள்ளதால் உத்தமர்கோயில் எனப் புகழ்ப் பெற்றது.சிவபெருமான் திருவோடு ஏந்தி பிச்சைக் கேட்ட திருக்கோலத்தில் உள்ளமையால் பிட்சாடனர் கோயில் (பிட்சாண்டவர் கோயில்) என்றும் பெயர் பெற்றது.

மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி க்ஷேத்திரம் எனவும் வழங்கப்படுகிறது.

பலமன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்துள்ளதாக இங்கு ணப்படும் குறிப்புகள் சொல்கின்றன.அவர்களுள் சோழமன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனும் அடங்குவர்.

முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே இல்லாமல் இருந்ததாகவும்,அதனால் எந்த நேரமும் இறைவனைத் தொழுதிட முடிந்ததாகவும் குறிப்பொன்றும் உள்ளது.

பெருமாள் சந்நதி , தாயார் பூர்வாதேவி பூர்ணவல்லி சந்நிதி ,சிவன் சந்நிதி,பார்வதி சந்நிதி,பிரம்மா சந்நிதி,சரஸ்வதி சந்நிதி என ஒவ்வொருவருக்கும் தனி சந்நிதி இத்தலத்தின் சிறப்பு.பெருமாள் கிழக்கு நோக்கிய புஜங்கசயனம்.

திருமங்கை ஆழ்வார், கதம்ப மகரிஷி,உபரிகிரவசு,சனகர்,சனந்தனர் முதலானோருக்கு பெருமாள் காட்சி தந்து அருளியுள்ள தலமாகும்

அப்பர், சுந்தரர்,திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களும் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளனர்.

108திவ்வியத் தலங்களான இக்கோயில், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வித்த கோயிலாகும்.அவரது பாசுரம் ஒன்று...

பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை  திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்திண் கடலேழு
மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே

தல விருட்சம் கதலி (வாழைமரம்) தீர்த்தம், கதம்ப தீர்த்தம்.

No comments:

Post a Comment